தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் அதிரடியாக உயர்வு…! அதிருப்தியில் மக்கள்…!!


* நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதம்
* பல கி.மீ நடந்து சென்ற அவலம்
* பல இடங்களில் மறியல்
சென்னை: தமிழகம் முழுவதும் பஸ் கட்டண உயர்வு இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வு தெரியாமல் பயணம் செய்த பலர் பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டனர். மேலும், நடத்துனரிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 22 ஆயிரத்து 509 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 615 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தினமும் சுமார் 88.64 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் 2.02 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பஸ் உதிரி பாகங்களின் விலை உயர்வு, ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட காரணங்களை கூறி கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு 50 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியது.

இதைதொடர்ந்து, ஆட்சிக்கு வந்த திமுக பஸ் கட்டணத்தை 5 ஆண்டுகளும் உயர்த்தவில்லை. ஆனால், கூடுதலாக 13 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டது. 43 ஆயிரம் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக 60 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியது. கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி இந்த கட்டணம் உயர்த்தப்பட்டது. இருப்பினும், சில மாதங்களுக்கு பிறகு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் கட்டணம் குறைக்கப்படவில்லை.
இந்தநிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது மீண்டும் பஸ் கட்டணத்தை 60 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு நேற்று இரவு உத்தரவிட்டது. அந்த உத்தரவு அதிகாலை முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது. அதன்படி, சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட நகர, மாநகர பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12 ஆகவும் இருந்தது. அந்தவகை பஸ்களில் இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.6 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.20 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும் இருந்தது. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.6 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.24. அதில், சுங்க கட்டணம் ரூ.1 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல் வால்வோ பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அதில் சுங்கம் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணத்தையும் சேர்த்தால், குறைந்த பட்ச கட்டணம் ரூ.28ம், அதிக பட்ச கட்டணம் ரூ.159ஆகவும் வசூலிக்கப்படுகிறது. வெளியூர்களுக்கு செல்லும் (புறநகர்) பஸ் கட்டணத்தை பொறுத்தமட்டில், சாதாரண பஸ்களில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் தற்போதுள்ள ரூ.5ல் இருந்து ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை தவிர சுங்க கட்டணமும் தனியாக வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அதைத் தவிர புறநகர்களுக்கு செல்லும் பஸ்களின் கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதில் சாதாரண பஸ்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கி.மீட்டருக்கு 18 பைசா வசூலிக்கப்படுகிறது. அதேபோல, விரைவு பஸ்களில் (செமி டீலக்ஸ்) 24 பைசாவும், அதி சொகுசு (சூப்பர் டீலக்ஸ்) பஸ்களில் 30 பைசாவும், அதி நவீன சொகுசு (அல்ட்ரா டீலக்ஸ்) பஸ்களில் 40 பைசாவும், குளிர்சாதன பஸ்களில் 50 பைசாவும், வோல்வோ பஸ்களில் 60 பைசாவும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு இன்று அதிகாலை 3 மணி முதல் அமலுக்கு வந்தது.திடீரென பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, கட்டண உயர்வை பற்றி அறியாமல் பலர் சரியான சில்லறையுடன் பஸ்சில் பயணம் செய்தனர். அவர்களிடம் நடத்துனர் கூடுதலாக கட்டணம் கேட்டதால் அதிர்ச்சியடைந்தனர். பயணிகள் நடத்துனருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கண்டக்டர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். இவ்வாறு, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பயணிகள் கண்டக்டர்களிடையே ஆங்காங்கே வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

இதுமட்டுமின்றி, உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்தாத பயணிகள் பலரை நடத்துனர்கள் பாதி வழியிலேயே இறக்கி விட்டனர். இதனால், பலர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. குறிப்பாக கூலி வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசின் இந்த கடுமையான கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர். அரசு பஸ் கட்டணம் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தனியாருக்கும் இந்த பஸ் கட்டண உயர்வு பொருந்தும் என்று அறிவித்துள்ளது. இதனால், தனியார் பஸ் கட்டணமும் ஓரிரு நாளில் கடுமையாக உயருவதற்கு வாய்ப்பை அரசு உருவாக்கியுளளது. இந்த பஸ் கட்டண உயர்வால், பொதுமக்கள் இன்று காலை முதல் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் கட்டண உயர்வால் விலைவாசியும் கடுமையாக உயரும் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசுப் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருச்சி கல்லணை அருகே திருவளர்சோலை பகுதியில் 3 அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சூளகிரி பேருந்து நிறுத்தம் எதிரே கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சூளகிரி – ஓசூர் பேருந்துகளின் கட்டணம் ரூ.10லிருந்து ரூ.20ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இரு மடங்கு கட்டணம் வசூலித்த தனியார் பேருந்தை மக்கள் சிறை பிடித்தனர். கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள விசாரணை அலுவலகத்தை பயணிகள் முற்றுகையிட்டு வாக்குவாதம்.

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில்- பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து பயணிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். கோவையில் பழைய டிக்கெட் கொடுத்து கூடுதல் பணம் கேட்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அரசு பஸ் கண்டக்டர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதம். இவ்வாறு தமிழகம் முழுவதும் பல இடங்களில் மறியல், முற்றுகை போராட்டம் நடந்தது.

சிப்ஸ் பாக்கெட் விற்று கட்டணத்தை செலுத்திய பக்தர்
தமிழக அரசு இரவோடு இரவாக பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் பல இடங்களில் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இன்று காலை வேலூர் புதிய பஸ் நிலையம் வழியாக வந்த ஐயப்ப பக்தர்கள், தங்கள் ஊர்களுக்கு செல்ல பஸ்சில் ஏறி அமர்ந்தனர். அப்போது அவர்களிடம் பஸ் கட்டணம் இரட்டிப்பு ஆனதை கண்டக்டர் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லையே? என புலம்பினர்.

வேறு வழியின்றி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்காக பிரசாதத்துடன் கொண்டு வந்த சிப்ஸ் பாக்கெட்டுகளை கடை கடையாக ஏறி விற்றனர். 120க்கு வாங்கிவந்த சிப்ஸ் பாக்கெட்டை 100க்கு விற்றனர். இது பலரையும் வேதனையில் ஆழ்த்தியது. இதேபோல் சில பயணிகள் பஸ் நிலையம் மற்றும் அங்குள்ள நபர்களிடம் பணம் கேட்டு பயணம் செய்த பரிதாபமும் நிகழ்ந்தது.

50 பாஸ் ரத்து சென்னை மாநகர பஸ்களில் பயணம் செய்வதற்காக மாதாந்திர கட்டண பாஸ், வாராந்திர கட்டண பாஸ், தினசரி கட்டண பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மாதாந்திர கட்டண பாஸ் ரூ.1000, வாராந்திர கட்டண பாஸ் ரூ.300, தினசரி கட்டண பாஸ் ரூ.50 எனவும் உள்ளது. இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மாநகர பஸ்களில் ஏறி சென்னை நகருக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பஸ் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்படுமா? அல்லது அதே கட்டணம் தொடருமா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரூ.50 கட்டணம் கொண்ட தினசரி பஸ் பாஸ் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மாதாந்திர மற்றும் வாராந்திர பஸ் பாஸ்களை வைத்திருப்பவர்கள் தொடர்ந்து பஸ்களில் பயணம் செய்யலாம். அந்த பாஸ்களின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. உயர்த்திய கட்டணத்தை அறிவித்த பிறகு மாதாந்திர மற்றும் வாராந்திர பாஸ் வைத்திருப்பவர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்தி பஸ்களில் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *